Sri Subrahmanya Swami Devasthanam, Tiruchendur, South India
 

கந்த சஷ்டி 5: சூர சங்காரம் எங்கு நடந்தது? தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?

மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-3)! முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் சொல்லப்படுவது திருச்செந்தூர் கடற்கரை. ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன? இலக்கியங்கள் சொல்வது என்ன? சூர சங்காரம் எங்கு நடந்தது? தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?

என்னடா இது, கேஆரெஸ் புதுசா கெளப்பறான்-னு பாக்கறீங்களா மக்கா?
ஹா ஹா ஹா! வாங்க பார்க்கலாம்!அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறித் தெற்கு நோக்கிச் செல்கிறான்.
விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். தாரகன் சூரனின் தம்பி. அவன் கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், வீரபாகுவையும், முருகனின் சேனையையும், மாயையால் மலைக்குள் அழுத்தி விடுகிறான்.

முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்க, தாருகன் அழிகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர். சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்புகிறான்.

மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவதச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.

பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம், சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறான் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் வீர மகேந்திரபுரத்துக்குத் தூது அனுப்ப முடிவாகிறது!

தூதின் போது, சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சூரனிடம் தூது உரைக்கிறான் வீரபாகு. ஆனால் அசுரனின் ஆணவத்தால் தூது முறிகிறது.
கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.

முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறான்.
அங்கு ஏமகூடத்தில் படைக்கலன்களுடன் தங்கி இருக்கிறான். அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.
பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.

வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக, கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.
கூர் வேல் சூரைப் பிளந்து சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது. சூரசங்காரம் நடந்து முடிகிறது!

முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது. வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான்.

சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன்.
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!

ஆக, சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் இருந்து தான்! ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் இருந்து தான்!

ஈழத்துக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பினைக் கண்டு, அடியேன் மனம் உவக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!
ஈழத்தின் இன்பத்துக்கும் அந்த முருகவேளே முன்னிற்க, முன்னிற்க!

இதோ கச்சியப்பரின் இலங்கை நிகழ்வுகள் பற்றிய கந்த புராணச் செய்யுள்: (யுத்த காண்டம், ஏமகூடப் படலம்/மீட்சிப் படலம்)

ஒன்பதோடு இலக்கவீரர் ஓங்கலார் அறுவர்கள்
அன்புசெய்து போற்றிசெய்ய அறுமுகேசன் அமரர்கள்
முன்புசெய் பணித்திறம் முறைப்படப் புரிந்திட
இன்பினோடும் ஏமகூட எழிலிருக்கை வைகினான்

இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வெள்ளங்
கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி
எவ்வம தடைந்த தொல்லை இலங்கை யங் குவடு நீங்கி
மைவரை புரைசூர் மேவு மகேந்திர புர முன் போந்தான்


இன்றைய சஷ்டிப் பாடல்...
படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!


அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!முருகா!!!
சஷ்டியின் ஆறு நாள் பதிவுகளில், ஒரு நாள் பதிவு விட்டுப் போனது. அதை நாளை திருப்பரங்குன்றப் பதிவாய் இட்டு, திருமணப் பதிவாய் நிறைவு செய்கிறேன்!
இது வரை சஷ்டிப் பதிவுகளுக்கு, அன்பாய் வந்திருந்த அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!

இந்தச் சஷ்டி விரதத்தின் மொத்தப் பலனும், நம் தமிழ் ஈழத்தில் விடிவு காணச் சென்று சேரட்டும்!

மொழி ஒன்று புகலாய் ஆயின்
முறுவலும் புரியாய் ஆயின்
விழியொன்று நோக்காய் ஆயின்
விரகமிக்கு உழல்வேன்; உய்யும்
வழியொன்று காட்டாய் ஆயின்
மனமும் சற்று உருகாய் ஆயின்
பழி ஒன்று நின்பாற் சூழும்
பரா முகம் தவிர்த்தி என்ன!

கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் (ஈழம்) உய்ய!

கந்த சஷ்டி காணும் வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
நண்பர்கள் அனைவர்க்கும் கந்த சஷ்டி வாழ்த்துக்கள்!


திருச்செந்தூர் தலம் பற்றிய ரகசியக் குறிப்புகளைச் சென்ற ஆண்டு சஷ்டியின் போதே கொடுத்திருந்தேன். இங்கு காணவும்!

Source: கந்த சஷ்டி 5: சூர சங்காரம் எங்கு நடந்தது? தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?

Home