Sri Subrahmanya Swami Devasthanam, Tiruchendur, South India
 

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

மூலவர்: சுப்பிரமணியசுவாமி
  உற்சவர்: சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: சரவணபொய்கை
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: -
  ஊர்: திருச்செந்தூர்
  மாவட்டம்: தூத்துக்குடி
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

அருணகிரிநாதர் 

அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;

சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -

செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

-அருணகிரிநாதர்

 

 

 
     
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628 205 தூத்துக்குடி மாவட்டம்

 
   
போன்:
   
  +91-4639 - 242 221 
    
 பொது தகவல்:
     
 

முருகனின் நைவேத்தியங்கள்:திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒரு வர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

 
     
 
The deities of Lord Murugan with Goddess Valli and Deivanai adorning the temple car of Lord Subramaniaswamy Temple Tiruchendur
Shanmukha Vilasa
devotees carrying 'Mayil Kavadi' to Lord Subramaniaswamy
Thousands of devotees pulling the temple car on the 10th day of Masi festival
Thūndukai Vināyaka Kovil in the 1940's
Thūndukai Vināyaka Kovil in the 1940's
Thūndukai Vināyaka Kovil
Thūndukai Vināyaka Kovil today
பிரார்த்தனை
    
 

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும்

 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம் 
    
 தலபெருமை:
     
 

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சஷ்டி யாகம்:திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

கண்ணாடிக்கு அபிஷேகம் : ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வானை திருக்கல்யாணம்: சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு!:கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

மும்மூர்த்தி முருகன்!:முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

பக்தர்கள் செல்ல முடியாத கோபுர வாசல்! : திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

நான்கு உற்சவர்கள் : பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

சந்தனமலை : முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

குரு பெயர்ச்சிக்கு இங்கே போங்க! :திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

இரண்டு முருகன் : சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம் :மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கிறார்கள்.

பஞ்சலிங்க தரிசனம்:முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

கங்கை பூஜை : தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

 
     
  தல வரலாறு:
     
 

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

 
     

home